Monday, January 14, 2013

பொங்க‌ல் ...

அரசியல் பூமியில்
காவிரியால் பொங்குது தினம் தினம் அறிக்கை வெள்ளம்
 ஊராட்சி, நாடாளுமன்றம், சட்டமன்றம் முப்போகமும் நடக்குது வாக்கு அறுவடை..

விவசாய பூமியில்
வானம் வெறித்து தினம் தினம் கண்ணீர் வெள்ளம்
மின்னலாய் நீளும் விரிசல் பூமியால்
 காளான் முளைக்குது அடுப்பங் கரையில்..

காவிரி போகிக்கு செல்லும் முன்
புத்தாடையாய் முல்லைப் பெரியாறு..


முப்போக‌ம் போயினும் ஒருபோக‌ம் தந்த
விண்ணுக்கும் ம‌ண்ணுக்கும் உள்ள‌ம் பொங்க
பொங்க‌லிடும் விவசாயிக்கு த‌லை வ‌ண‌ங்கி..

கவலைகள் தொலைத்து
க‌ட‌மைக‌ள் புரிந்து
உற‌வுக‌ள் வ‌ள‌ர்த்து
உள்ள‌ம் பொங்க‌  வாழ
வாழ்த்துக்க‌ள்!!!!!!!!!!!!

Wednesday, October 24, 2012

சிக‌ப்பு ரோஜா


மழைக்கால சென்னையின் அவசரமான காலை வேளையில் மின்சார ரயிலுக்காய் இயந்திரத்தனமாய் இயங்கிக் கொண்டிருக்கும் வேளையில் சட்டென்று கண்ணைப் பறித்தது அவள் முகம்.  ஒரு நொடிக்குள் மறுபடி திரும்பிப் பார்க்க வைத்தது அவள் பூ முகம்.  பெய்து முடித்த மழையில் குளித்தது போன்ற பொலிவான முகம்   அந்தி சாயும் சூரியனை சுருக்கி வைத்தது போன்ற சிவந்த வட்ட முகம், நட்ட நடுவில் சிறிது மஞ்சள் கலந்தது போன்ற சிறு பொட்டு, அவள் முகத்தின் பட்டுப்போன்ற மென்மையை கண்களாலேயே உணர முடிந்தது.

அவசரமாய் பறந்து செல்லும் பெண்கள் கூட்டம் ஒருமுறை அவளை ஏக்கமாய் பார்த்து தீண்டிச் செல்வோமா என்று தயங்கி நகர்ந்தது.  கும்பல் கடந்து போகையில் அவள் முகத்தில் ஒரு பதட்டம், பரபரப்பான் பாதங்கள் அவளை நெருங்குகையில் அவள் முகத்தில் ஒரு நடுக்கம் பரவுவதையும் காற்றசைவில் அவள் முகத்தின் உறுப்புகள் அனைத்தும் அதிர்வதும் தெளிவாகவே தெரிந்தது.   திருவிழா நெரிசலில் தொலைந்து போன குழந்தையின் கண்களில் தெரியும் ஒருவித பீதி அவ்வப்போது வந்து மறைந்தது.

சிறிது வேக‌மான‌ காற்றில் கேச‌ம் க‌லைத்து ந‌டைமேடையின் முக‌ம் பார்த்து த‌னியாய் நின்ற‌வ‌ளை அடுத்த‌ மின்சார‌ ர‌யில் வ‌ருவ‌த‌ற்குள் வேக‌மாய் நெருங்கினேன், ச‌ற்று  த‌ள்ளி நின்று வித்தியாச‌மாய் பார்த்த‌ இர‌ண்டொரு ஆண்க‌ளையும், ஒருசில‌ பெண்க‌ளின் ஏக்க‌ப் பார்வையையும் அலட்சிய‌ம் செய்து அவ‌ள் மென்க‌ர‌ம் தொடுகையில் முள்ளாய் குத்தினாலும் என் விர‌லிடையில் மெதுவாய் அடைக்க‌ல‌ம் புகுந்து மெதுவாய் புன்முறுவல் புரிந்தாள்.  அவ‌ள் பூக்க‌ர‌ம் ப‌ற்றி ந‌டைமேடையிலிருந்து ந‌க‌ர்த்தி அருகில் உள்ள‌ க‌ருப்பு ப‌ளிங்கு க‌ல் நாற்காலியில் அம‌ர்த்தி நிமிர்கையில் வீசிய‌ காற்றில் அவ‌ள் பொலிவாய் சிரிப்ப‌தை ர‌சித்து ந‌க‌ர்கையில் நெஞ‌சில் ஓர் உற்சாக‌ம்.

வேக‌மாய் வ‌ந்த‌ மின்சார‌ ர‌யிலில் இட‌ம் பிடித்து இய‌ந்திர‌ உல‌கில் நுழைந்து க‌ண்மூடுகையில் யார் த‌லையிலிருந்தோ த‌வ‌றி விழுந்து ந‌டைமேடை பெண்க‌ள் குனிந்து எடுக்க‌த் த‌ய‌ங்கிய‌ அந்த‌ சிக‌ப்பு ரோஜா இனி ஏதோ ஒரு பெண்ணின் த‌லையை அல‌ங்க‌ரிக்கும் எனும் ந‌ம்பிக்கை பிற‌ந்த‌.து.

Saturday, August 11, 2012

சுருக்கெழுத்து

 
அகம் திறந்து 
முகம் பார்த்து 

துக்கம் பகிர்ந்து 
தூக்கம் மறந்து

நேரம் மறந்து 
அர்த்தம் மறந்து 

அரட்டை அடித்தவர்களின்  மின்னஞ்சல்
சுருக்கெழுத்(து)தாய் 
       hi hw r u?
       c u later..  bye ..