மழைக்கால சென்னையின் அவசரமான காலை வேளையில் மின்சார ரயிலுக்காய் இயந்திரத்தனமாய் இயங்கிக் கொண்டிருக்கும் வேளையில் சட்டென்று கண்ணைப் பறித்தது அவள் முகம். ஒரு நொடிக்குள் மறுபடி திரும்பிப் பார்க்க வைத்தது அவள் பூ முகம். பெய்து முடித்த மழையில் குளித்தது போன்ற பொலிவான முகம் அந்தி சாயும் சூரியனை சுருக்கி வைத்தது போன்ற சிவந்த வட்ட முகம், நட்ட நடுவில் சிறிது மஞ்சள் கலந்தது போன்ற சிறு பொட்டு, அவள் முகத்தின் பட்டுப்போன்ற மென்மையை கண்களாலேயே உணர முடிந்தது.
அவசரமாய் பறந்து செல்லும் பெண்கள் கூட்டம் ஒருமுறை அவளை ஏக்கமாய் பார்த்து தீண்டிச் செல்வோமா என்று தயங்கி நகர்ந்தது. கும்பல் கடந்து போகையில் அவள் முகத்தில் ஒரு பதட்டம், பரபரப்பான் பாதங்கள் அவளை நெருங்குகையில் அவள் முகத்தில் ஒரு நடுக்கம் பரவுவதையும் காற்றசைவில் அவள் முகத்தின் உறுப்புகள் அனைத்தும் அதிர்வதும் தெளிவாகவே தெரிந்தது. திருவிழா நெரிசலில் தொலைந்து போன குழந்தையின் கண்களில் தெரியும் ஒருவித பீதி அவ்வப்போது வந்து மறைந்தது.
சிறிது வேகமான காற்றில் கேசம் கலைத்து நடைமேடையின் முகம் பார்த்து தனியாய் நின்றவளை அடுத்த மின்சார ரயில் வருவதற்குள் வேகமாய் நெருங்கினேன், சற்று தள்ளி நின்று வித்தியாசமாய் பார்த்த இரண்டொரு ஆண்களையும், ஒருசில பெண்களின் ஏக்கப் பார்வையையும் அலட்சியம் செய்து அவள் மென்கரம் தொடுகையில் முள்ளாய் குத்தினாலும் என் விரலிடையில் மெதுவாய் அடைக்கலம் புகுந்து மெதுவாய் புன்முறுவல் புரிந்தாள். அவள் பூக்கரம் பற்றி நடைமேடையிலிருந்து நகர்த்தி அருகில் உள்ள கருப்பு பளிங்கு கல் நாற்காலியில் அமர்த்தி நிமிர்கையில் வீசிய காற்றில் அவள் பொலிவாய் சிரிப்பதை ரசித்து நகர்கையில் நெஞசில் ஓர் உற்சாகம்.
வேகமாய் வந்த மின்சார ரயிலில் இடம் பிடித்து இயந்திர உலகில் நுழைந்து கண்மூடுகையில் யார் தலையிலிருந்தோ தவறி விழுந்து நடைமேடை பெண்கள் குனிந்து எடுக்கத் தயங்கிய அந்த சிகப்பு ரோஜா இனி ஏதோ ஒரு பெண்ணின் தலையை அலங்கரிக்கும் எனும் நம்பிக்கை பிறந்த.து.